Sunday, September 15, 2013

உயிரை கைப்பற்றும் மலக்கு இஸ்ராயீல்? கட்டுக்கதை?

அன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
 
நம்மிடையே ஒரு கருத்து உண்டு. இஸ்ராயீல் அவர்கள்தான் நம் உயிரை கைப்பற்றும் (நமக்கு இறப்பு ஏற்படுத்தும்) மலக்காவார்கள் என்று. அதற்கு சில கட்டுக்கதைகளையும் கூறுவார்கள் நம் ஊர்களில்.
என்ன கதை என்று கேட்கும் சகோதரர்களுக்கு மட்டும் சிறிது ஞாபகப்படுத்தினால் அவர்கள் விளங்கிக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். சில மலக்குகளை இறைவன் பூமிக்கு அனுப்பி மண் அள்ளி வரச்சொன்னான். அனைவரும் பூமிக்கு வந்து மண் அள்ளும்போது பூமியின் வேண்டுகோளுக்கிணங்க சிலர் மண் அள்ளாமல் போய் விட்டார்கள். ஆனால் இஸ்ராயீல்  மட்டும் பூமியின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமல் மண்ணை அள்ளிக்கொண்டு இறைவனிடம் சென்றார். அதனால்தான் இஸ்ராயீல் (அலை) அவர்களை இறைவன் மனிதர்களின் உயிர்களை எடுக்கும் மலக்காக தேர்ந்தெடுத்தான் என்று கூறுவார்கள்.
இந்த கட்டுக்கதை எப்படி நம் சமுதாயத்தில் பரவியது என்பது தெரியவில்லை. இந்த கதையை சிலர் ஏற்றுக்கொண்டாலும், அனைத்து சகோதரர்களும் கீழ்கண்டவற்றை சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
மலக்குகள் என்பவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மனிதனைப்போல் சிந்திக்கும் திறனை எல்லாம் வல்ல இறைவன் வழங்கவில்லை. இறைவன் என்ன சொல்கிறானோ அதை கண்டிப்பாக மலக்குகள் நிறைவேற்றியே தீருவார்கள்.
அப்படியிருக்க, சில மலக்குகள் மட்டும் எப்படி மண் அள்ளாமல் திரும்பச்சென்றார்கள்?
அப்படி மண் அள்ளாமல் சென்றால் இறைவனின் கட்டளையை மீறியவர்களாக அவர்கள் ஆக மாட்டார்களா?
என்ற கேள்விகள் அனைவருக்கும் எழலாம்.
இறைவனே தனது திருமறையில் இப்படி கூறுகிறான்.
1. (பாவிகளின் உயிர்களைக்) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக
2. (நல்லோர் உயிர்களை) இலேசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக
அல்குர்ஆன் (அத்தியாயம் 79 – வசனம் 1, 2)
இறைவன் இப்படி கூறுவதன் மூலம் உயிரை கைப்பற்றும் மலக்கு ஒருவரல்ல என்பதும் அவர்கள் பலர் என்பதும் நமக்கு விளங்குகிறது. மேலும், பாவிகளின் உயிர்களை கடினமாக கைப்பற்றும் மலக்குகள் தனியாகவும், நல்லோர் உயிர்களை இலகுவாக கைப்பற்றும் மலக்குகள் தனியாக இருப்பதாலும் தான் இறைவன் தனித்தனியாக அவர்களின் மீது சத்தியமிடுகிறான்;.
சகோதரர்களே!!! இதற்கு மாற்றுக்கருத்து இருந்தால் அல்லது இஸ்ராயீல்?அவர்கள்தான் நம் உயிரை கைப்பற்றும் மலக்கு என்று நம்புபவர்கள் இருந்தால் தயவுசெய்து தங்களுக்குத் தெரிந்த ஆதாரங்களை முன் வைக்கலாம்.
அல்லாஹ் மிகப்பெரியவன். மேலும் அவனே அனைத்தையும் அறிந்தவன்.
 

இஸ்லாமிய ஒளியில் விஞ்ஞானம் - இரும்பு மற்றும் தராசு

அன்பு சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
 
எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையிலே கூறுகிறான்.
 
நிச்சயமாக நாம் நம்முடைய தூதர்களை தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம், அன்றியும் அவர்களுடன் வேதத்தையும், மனிதர்கள் நீதியுடன் நிலைத்திருப்பதற்காக தராசையும் இறக்கினோம், இன்னும் இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் (போருக்கு வேண்டிய) கடுமையான சக்தியும், எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன. (இவற்றின் மூலமாகத்) தனக்கும் தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்வோர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்து கொள்வதற்காகவும் அல்லாஹ் (இவ்வாறு செய்துள்ளான்), நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன். 
 அல்குர்ஆன் (அத்தியாம்: 57 வசனம்: 25)
 
சகோதரர்களே!!! மேற்கண்ட அத்தியாயத்தின் மூலமாக எல்லாம் வல்ல இறைவன் நமக்கு உணர்த்தும் விஞ்ஞான உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 
தராசு
மனிதர்கள் நீதியுடன் நிலைத்திருப்பதற்காக வேதத்தையும், தராசினையும் இறக்கியதாக அல்லாஹ் தன் திருமறையிலே கோடிட்டு காட்டுகிறான். இந்த வசனத்தில் மாபெரும் விஞ்ஞான உண்மை பொதிந்து கிடக்கிறது.
உதாரணமாக ஒரு மரக்கட்டையையும் அதேபோல் பருமனுள்ள ஒரு இரும்புத்துண்டையும் ஒரு தராசில் வைத்து நிறுத்தோமானால் எதன் எடை அதிகமாக இருக்கும் என்று கேட்டால் இரும்பின் எடைதான் அதிகமாக இருக்கும் என்று சொல்வோம். ஆனால், அதே மரக்கட்டையையும் இரும்புத்துண்டையும் எடுத்துக்கொண்டு விண்ணில் பல மைல்தூரங்களுக்கு அப்பால் சென்று (சந்திரனுக்கு அருகில் என்று வைத்துக்கொள்ளுங்கள்) அதே தராசில் வைத்து நிறுத்தோமானால் இப்பொழுது அவ்விரண்டின் எடையும் சமமாக இருக்கும்.
 
எப்படி இவ்வாறு நிகழ்கிறது? பூமியில் மட்டும் எவ்வாறு இரும்பின் எடை அதிகமாக இருக்கிறது?
 
பூமியில் இரும்பின் எடை அதிகமாக காணப்படுவதற்கு அதன் மீதுள்ள ஈர்ப்பு விசையே (Gravitational Force) காரணம். பூமியை விட்டு நாம் விலகிச்சென்று விட்டால் புவிஈர்ப்பு விசை செயல்படாது. அதனால் தான் அங்கு எந்த வித்தியாசமும் இல்லை. இதைத்தான் வல்ல இறைவன் மனிதர்கள் நீதியுடன் நிலைத்திருப்பதற்காக (வியாபாரத்தில் மனிதர்கள் எடையை பேணுவதற்காக, எடையில் நீதமாக நடந்துகொள்வதற்காக) தராசை (புவிஈர்ப்பு விசையை) இறக்கியதாக கூறுகிறான்.
 
புவிஈர்ப்பு விசை எப்பொழுது நியூட்டனால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். 1400 ஆண்டுகளுக்கு முன் புவிஈர்ப்பு விசை என்றாலே என்னவென்று தெரியாத காலத்தில் அதைப்பற்றி ஒருவரால் பேச இயலுமா? ஆனால், நம் குர்ஆன் பேசியிருக்கிறது. இதுவே, இறைவனின் வேதம் என்பதற்கு சான்றல்லவா?
 
இரும்பு
மேலும் அதே வசனத்தில் இன்னும் இரும்பையும் தானே இறக்கியதாக கூறுகிறான்.
 
நம் காலத்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஒரு பேருண்மை என்னவென்றால், இரும்பு பூமியில் உருவாகியிருக்க முடியாதென்றும் மேலும் நம் சூரியக்குடும்பத்தில் கூட அது உருவாவதற்கான தன்மை இல்லையென்றும் அறிவித்துள்ளனர். சூரியனனின் வெளிப்பரப்பு வெப்பம் சுமார் 6000 டிகிரி செல்சியஸ் என்றும் சூரியனின் முழுமையான வெப்ப அளவு சுமார் 20 மில்லியன் டிகிரி செல்சியஸ் என்றும் வரையறுத்துள்ளனர். இரும்பு உருவாவதற்கு தோராயமாக சில நூறு மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவை என்றும், அதனால் சூரியக்குடும்பத்தில் இரும்பு உருவாகியிருக்க முடியாது என்றும் உறுதியாக மெய்ப்பித்துள்ளனர்.
 
சூப்பர் நோவாக்களின் (பெரிய நட்சத்திரங்கள்) வெடிப்பின் மூலம் தான் இரும்பானது சூரியக்குடும்பத்திற்குள்ளே வந்திருக்க வேண்டுமென்றும் கூறுகின்றனர். 5 மில்லியன் வருடங்களுக்கு முன் சூப்பர் நோவாக்கள் வெடித்து சிதறியதை தற்பொழுது சில ஆய்வுகளின் மூலமும் நிரூபித்துள்ளனர். நம் பூமியில் படிந்துள்ள இரும்பு படிமங்களை ஆராய்ந்ததில் அது விண்ணிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்பதையும் தற்போதைய அயர்ன்-60 ஐசோடோப் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
 
சகோதரர்களே!!! இரும்பினை தானே இறக்கியதாக (sent down) இறைவன் கூறுவதாக நம் திருக்குர்ஆன் அழகுற எடுத்துரைக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எவரும் சிந்தித்திருக்கவே முடியாத இந்த பேருண்மையை எல்லாம் வல்ல இறைவனைத் தவிர வேறு யாரால் கூற முடியும்?
 

இஸ்லாமிய ஒளியில் விஞ்ஞானம் - கிழக்குத் திசைகள் மற்றும் மேற்குத் திசைகள்

 
அன்பு சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
 
எல்லாம் வல்ல இறைவன் தனது திருமறையிலே கீழ்கண்டவாறு கூறுகிறான்.
 
எனவே, கிழக்குத் திசைகள் மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
 
அல்குர்ஆன் (70: 40)
 
நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். மேற்கண்ட வசனங்களில் கிழக்குத் திசைகள் என்றும், மேற்குத் திசைகள் என்றும் வருகிறதே என்று!! நமக்குத்தெரிந்து ஒரு கிழக்கு - ஒரு மேற்கு தானே இருக்கிறது என்றும் சகோதரர்கள் நினைக்கலாம்?!
 
சகோதரர்களே!!! இறைவன் ஏன் இவ்வாறு கூறுகிறான். அதற்குரிய அர்த்தம் என்ன? சற்று விரிவாகப் பார்ப்போம்.
 
சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது என்று நம்முடைய ஆரம்ப வகுப்பிலிருந்து நமக்கு சொல்லிக் கொடுத்ததை நாம் அறிவோம்.
 
இப்பொழுது ஒரு கேள்வி: உண்மையிலேயே சூரியன் கிழக்கில் உதிக்கிறதா? மேற்கில் மறைகிறதா? அது உண்மையென்றால், சூரியனானது காலையில் உதித்துவிட்டு மாலையில் அஸ்தமனமாகி விடுகிறதா? எளிதாக கேட்க வேண்டுமென்றால், நாம் விளக்கை ON செய்துவிட்டு பிறகு OFF செய்வதைப்போல் இறைவன் சூரியனை ON/OFF செய்கின்றானா?
 
சகோதரர்களே!!! சற்று சிந்தியுங்கள். சூரியன் தன்னுடைய நிலையிலிருந்து ஓய்வெடுத்துக்கொள்வதே இல்லை. அது வெப்பத்தை தன்னுள் உருவாக்கிக்கொண்டே இருக்கும் (இறைவன் அதற்கு "நிறுத்து" என்று கட்டளையிடும் வரை).
சூரியன் உதிப்பதும் இல்லை. அஸ்தமனம் ஆவதும் இல்லை.
 
பிறகு ஏன் நாம் "சூரிய உதயம்" என்றும் "சூரிய அஸ்தமனம்" என்றும் சொல்கிறோம்?
ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஏன் அப்படி சொல்லப்படுகிறது? இரவு - பகல் ஏன் ஏற்படுகிறது?
 
கீழ்கண்ட வசனத்தை பார்ப்போம் சற்று விரிவாக அறிந்து கொள்ள.
 
அவன் வானங்களையும் பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான். அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான். இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான். சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது. (நபியே!) அறிந்து கொள்வீராக!
அவன் (யாவரையும்) மிகைத்தவன். மிக மன்னிப்பவன்.
 
அல்குர்ஆன் (39: 5)
 
இறைவனின் மேற்கண்ட வசனத்தின் மூலம் பூமி சுற்றுகிறது என்றும் அதுவும் ஒரு தவணைப் பிரகாரம் (24 மணி நேரம்) நடக்கிறது என்றும் அறிந்து கொள்கிறோம்.
 
சகோதரர்களே!!! நாம் நன்றாக விளங்கிக் கொள்வதற்காக, இந்தியாவையும் அமெரிக்காவையும் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். பூமி சுழற்சியின் காரணமாக, இந்தியாவிற்கு சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக தன் முகத்தை (வெளிச்சத்தை) காட்டும் போது, அதே நேரத்தில் அமெரிக்காவில் கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழத் தொடங்கியிருக்கும்.
 
இந்தியாவிற்கு எது கிழக்கு திசையோ அது அமெரிக்காவிற்கு இப்பொழுது மேற்கு திசை.
அமெரிக்காவிற்கு எது கிழக்கு திசையோ அது இந்தியாவிற்கு இப்பொழுது மேற்கு திசை.
 
இப்பொழுது விளங்குகிறதல்லவா? இறைவன் ஏன் கிழக்குத் திசைகள் என்றும் மேற்குத் திசைகள் என்றும் சொன்னான் என்று?
 
இந்த விஞ்ஞான உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன் இறைவனைத் தவிர வேறு யாரால் சொல்லியிருக்க முடியும் சகோதரர்களே?
 
சிந்தித்துணரும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் திருக்குர்ஆனில் இருப்பதாக பின்வரும் வசனத்தின் மூலம் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு சுட்டிக்காட்டுகின்றான்.
 
நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக்காட்டும்) சான்றுகள் உள்ளன.
 
அல்குர்ஆன் (2: 164)
 
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். அவன் (யாவரையும்) மிகைத்தவன்.
 

இஸ்லாமிய ஒளியில் விஞ்ஞானம் - பிரபஞ்சம் (Universe) விரிவடைதல்



அன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இன்று நாம் "நமது பிரபஞ்சம் (Universe) விரிவடைந்து கொண்டே செல்கிறது" என்ற நிரூபிக்கப்பட்ட உண்மையினை சற்று அலசுவோம்.

இறைவன் தன்னுடைய திருமறையிலே கீழ்கண்டவாறு கூறுகிறான்.

மேலும் நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம், நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
With power did We construct the heaven. Verily, We are Able to extend the vastness of space thereof.
அல்குர்ஆன் (51: 47)

சகோதரர்களே!!! இந்த வசனத்தின் மூலம் இறைவன் தன்னுடைய வல்லமையைப் பற்றியும் மேலும் இந்த பிரபஞ்சமானது அவனுடைய வல்லமையினைக் கொண்டே விரிவடைந்து கொண்டிருப்பதாகவும் கூறுகின்றான். 1400 ஆண்டுகளுக்கு முன் எந்த மனிதராவது (எந்தவித அறிவியல் வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில்) இப்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மையினை அறிந்து சொல்ல முடியுமா? இந்த ஒரு வசனமே போதுமல்லவா நமது திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்தது என்று நிரூபிக்க.

நமக்கெல்லாம் நமது வகுப்புக்களில் படித்துக் கொடுக்கப்பட்டபடி, இந்த பிரபஞ்சமானது நிலையானது (Constant Matter) என்றும் மேலும் இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லா கோள்களும், நட்சத்திரங்களும் மற்ற ஏனையவைகளும் தங்களுக்குள் ஒன்றையொன்று மீறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் தெரியும்.

ஆனால், தற்போதைய கண்டுபிடிப்புகள் இதற்கு மாற்றமாக இருக்கின்றன. இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு ஆரம்பம் (Big Bang) இருந்ததென்றும், அது அன்றிலிருந்து ஒரு சீரான வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றும் தற்போதைய நவீன கருவிகளின் உதவியுடன் வானியல் ஆராய்ச்சியாளர்கள் நமக்கு ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த விண்ணியல் அறிஞர் (Astro Physicist) அலெக்ஸாண்டர் ஃபிரைட்மென் மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த அகிலவியல் அறிஞர் (Cosmologist) ஜார்ஜஸ் லெமடைர் இருவரும் ஒரு கோட்பாட்டின் மூலம் இந்த பிரபஞ்சமானது நிலையானது இல்லை என்றும், அது விரிவடைந்து கொண்டே செல்வதாகவும் தங்களது கருத்தை முன் வைத்தனர். ஆனால் அதை அவர்களால் கோட்பாட்டின் படி நிரூபிக்க முடிந்ததே தவிர ஆதாரத்தை தர முடியவில்லை.

பின்னர் அந்த கோட்பாடு, 1929-ம் ஆண்டில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது ஹப்புள் (Hubble) டெலஸ்கோப் மூலம். அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் எட்வின் ஹப்புள் (Edwin Hubble) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த நவீன டெலஸ்கோப். இந்த டெலஸ்கோப்பின் மூலம் ஆராய்ந்ததில், பிரபஞ்சமானது நிலையானது இல்லையென்றும் அது ஒரு சீரான வேகத்தில் ஒன்றையொன்று விட்டு விலகி ஓடிக் கொண்டிருக்கிறது (விரிந்து கொண்டிருக்கிறது) என்றும் பல வகையான  கண்காணிப்பு ஆய்வுகளின் (observations carried over the years) மூலம் கண்டறிந்துள்ளனர்.

நம்முடைய பால்வெளி மண்டலமும் (Milkyway Galaxy), நட்சத்திர மண்டலமும் (Star Galaxy) கூட ஒன்றைவிட்டு ஒன்று விலகி ஓடிக் கொண்டிருக்கின்றன. நம்முடைய பால்வெளி மண்டலத்தில் இருக்கும் சூரியன் அதை சுற்றிவரும் அனைத்துக் கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும், இதை ஒரு பலூனை வைத்து ஒப்பிடுகிறார்கள். பலூனானது ஊத ஊத விரிவடைந்துகொண்டே செல்கிறது அல்லவா அப்படி நமது பிரபஞ்சமும் விரிவிடைந்து கொண்டே செல்வதாக கூறுகிறார்கள். இறைவன் "நிறுத்து" என்று சொல்லும் வரை அந்த பயணம் தொடரும்.

பலூனை ஊதுவதை நிறுத்தியவுடன் எப்படி அது திரும்ப தனது பழைய நிலையை அடைகிறதோ அப்படி ஒரு நாள் பிரபஞ்சத்திற்கும் நிகழும். விரிவடைந்துகொண்டே செல்லும் பிரபஞ்சமானது ஒரு நாள் நின்று (இறைவனின் கட்டளைப்படி) திரும்ப சுருங்க ஆரம்பிக்கும். அதுதான் யுக முடிவுநாள்.

மேற்கண்ட உதாரணத்தை விட இறைவன் தன்னுடைய திருமறையிலே ஒரு வசனத்தின் மூலம் கூறுவது நாம் மேலும் விளங்கிக் கொள்ள விசாலமானது.

ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.
Allah knows what every female bears, and by how much the wombs fall short (of their time or number) or exceed. Everything with Him is in (due) proportion.
அல்குர்ஆன் (13: 8)

அனைத்தையும் அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். அவன் (யாவரையும்) மிகைத்தவன்.

இஸ்லாமிய ஒளியில் விஞ்ஞானம் - விண்வெளி பயணத்தால் நமக்கு ஏற்படும் மாற்றங்கள்



அன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர்களே!!! இன்று வானத்திற்கு பயணம் செய்யும் விண்வெளி வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் விண்வெளி பயணம் செல்லும் மனிதர்களுக்கு என்ன மாறுதல்கள் ஏற்படும் என்பதை கீழ்கண்ட ஒரு வசனத்தின் மூலம் தன் திருமறையிலே நமக்கு விளக்குகின்றான்.

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச்செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். 
And whomsoever Allah wills to guide, He opens his breast to Islam, and whomsoever He wills to send astray, He makes his breast closed and constricted, as if he is climbing up to the sky. Thus Allah puts the wrath on those who believe not. 
அல்குர்ஆன் (6: 125)

சகோதரர்களே!!! இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் நமக்கெல்லாம் நேரடியாக உணர்த்துவது, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக தான் யாருக்கு வழிகாட்ட நாடுகின்றானோ அவர்களுக்கு வழிகாட்டி அவர்களுடைய நெஞ்சத்தை விசாலமாக்குவதாகவும், யாரை அவன் வழி கெடுக்க நாடுகின்றானோ அவர்களுடைய நெஞ்சத்தை இறுகிச் சுருங்கும்படி செய்வதாகவும் கூறுகின்றான். நம் குர்ஆனுடைய அற்புதத்தை பாருங்கள் சகோதரர்களே!! இந்த வசனத்தில் தான் அந்த மாபெரும் விஞ்ஞான உண்மையும் ஒளிந்து கொண்டுள்ளது.

"வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப்போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்" - என்ன ஒரு அற்புதமான வரிகள் சகோதரர்களே!! இன்றைய விஞ்ஞானம் கண்டுகொண்ட இந்த உண்மையினை 1400 ஆண்டுகளுக்கு முன் நம் திருக்குர்ஆன் சொல்கிறது. யாராவது இந்த அளவு சிந்திக்க முடியுமா அல்லது அறிய முடியுமா சகோதரர்களே!!! எல்லாம் வல்ல இறைவனைத் தவிர. இறைவனுடைய ஒவ்வொரு வசனங்களும் நம்மை சிந்திக்க தூண்டுவதாகவே அமைந்துள்ளது. இறைவன் கூறியபடி ஒவ்வொரு வசனமும் நமக்கு படிப்பினை தான்!! ஆச்சரியம் தான்!!

விண்வெளி வீரர்கள் விண்வெளியிலிருந்து பூமிக்கு திரும்பியபோது, மூன்றில் இரண்டு பங்கு நபர்கள் தாங்கள் லேசாக உணர்வதாகவும், தலைச்சுற்றல் மற்றும் தங்களால் உறுதியாக நிற்கக்கூட முடியவில்லையென்றும் சொன்னார்கள்.

1998-ம் ஆண்டு மீண்டும் ஒரு விண்கலத்தை அனுப்பும்போது ஏற்கனவே விண்ணுக்குசென்று திரும்பியவர்கள் சொன்னதை (ஏன் இப்படி ஏற்படுகிறது என்பதை) ஆராய முற்பட்டார்கள். விண்வெளிக்குச் சென்றவர்களின் மனநிலை மற்றும் அவர்களின் ஆரோக்கியம் முற்றிலுமாக கண்காணிக்கப்பட்டது. அப்பொழுதுதான் சில ஆய்வு முடிவுகள் தெரிய வந்தது.


விண்வெளி வீரர்கள் விண்ணில் இருக்கும்போது, அவர்களுடைய இதயமானது இறுக்கமாகவும், சுருங்கியும் காணப்பட்டது. மேலும், அவர்களது இதயமானது இரத்தத்தை அதிகமாக பம்ப் (Pump) செய்யாமல் குறைவாகவே பம்ப் செய்தது. இந்த ஆய்வின் மூலம்தான் தெரியவந்தது, விண்வெளி வீரர்களுக்கு இரத்த ஓட்டம் மந்தமாக இருந்ததாகவும், அதனால்தான் அவர்கள் பூமிக்கு திரும்பியவுடன் லேசாக உணருதல், தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும் முன்னாள் நாசா டைரக்டர் கன்னர் பிளாம்க்விஸ்ட் (Gunnar Blomqvist, Former Director of NASA Specialized Center of Research and Training in Physiology at the University of Texas) விளக்கினார்.

சகோதரர்களே!! நாமெல்லாம் நிச்சயமாக சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். எவ்வளவு உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன நம் திருக்குர்ஆனில்? நாமனைவரும் அதன் பொருளறிந்து ஓத முன்வர வேண்டும் இன்ஷா அல்லாஹ். மேலும், நம்முடைய ஆராய்ச்சிப் பார்வையினையும் அதன் பக்கம் திருப்பி பல விஞ்ஞான உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

அனைத்தையும் அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். அவன் (யாவரையும்) மிகைத்தவன்.

இஸ்லாமிய ஒளியில் விஞ்ஞானம் - ப்ளாக் ஹோல்ஸ் (Black Holes)



அன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

இன்று நாம் ஒரு ஆச்சரியமான (விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட) தலைப்பைப்பற்றி அறிந்து கொள்ள இருக்கிறோம். அது தான் ப்ளாக் ஹோல்ஸ் (Black Holes) எனப்படும் நம்முடைய நட்சத்திர மண்டலத்தில் காணப்படும் மிகப்பிரமாண்டமான கருமையான பகுதி.
தலைப்புக்கு போகும் முன், முதலில் நம் குர்ஆனிலுள்ள கீழ்கண்ட வசனத்தைப் பார்ப்போம்.
சூரத்துல் வாகிஆ-வில் எல்லாம் வல்ல அல்லாஹ் கீழ்கண்டவாறு கூறுகிறான்.

فَلَاۤ   اُقۡسِمُ  بِمَوٰقِعِ  النُّجُوۡمِ ﴿ۙ۷۵﴾ وَ  اِنَّہٗ  لَقَسَمٌ  لَّوۡ  تَعۡلَمُوۡنَ عَظِیۡمٌ ﴿ۙ۷۶﴾
So, I swear by the place where the stars fall.  And that is indeed a mighty oath, if you but knew.
அல்குர்ஆன் (56: 75-76)

மவாகி (مَوٰقِعِ) என்ற வார்த்தை "விழுதல் (fall)"  என்று பொருள்படும்.
இந்த வார்த்தை "வகாஆ" என்ற மூலச் சொல்லிலிருந்து வந்ததாகும். "வகாஆ" என்பதன் பொருள் விழுதல் (Action of Falling) என்று பொருள்படும்.
இந்த குர்ஆன் வசனம் சில தமிழ் மொழிபெயர்ப்புக்களில் சரியாக மொழி பெயர்க்கப்படவில்லை. ஜான் டிரஸ்ட் வெளியிட்ட குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பில் இந்த வசனம் கீழ்கண்டவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஜான் டிரஸ்ட்:
"நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும்."
நான் தேடிப்பார்த்தவரை பி.ஜே. அவர்கள் தமிழில் மொழிபெயர்த்த குர்ஆனில் மட்டும், சரியான முறையில் கீழ்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்.
 
பி.ஜே.:
"நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம்."

மேலும், "மவாகி" என்ற வார்த்தை வேறொரு குர்ஆன் வசனத்திலும் (சூரத்துல் காஃப்) பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு சரியான மொழிபெயர்ப்பை ஜான் டிரஸ்ட் வெளியிட்ட குர்ஆன் மொழிபெயர்ப்பிலும் பார்க்க முடிகிறது. அந்த வசனம் தங்களின் பார்வைக்கு.

And the sinners will see the Fire; so they will know that they will have to fall into it, and they will find no way to bypass it.

ஜான் டிரஸ்ட்:
இன்னும் குற்றவாளிகள், (நரக) நெருப்பைப் பார்ப்பார்கள், தாங்கள் அதில் விழப்போகிறவர்களே என்பதைத் தெரிந்து கொள்வார்கள், அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காணமாட்டார்கள்.

பி.ஜே.:
குற்றவாளிகள் நரகத்தைப் பார்க்கும் போது அதிலே தாங்கள் விழக்கூடியவர்கள்
என்பதை அறிந்து கொள்வார்கள். அதை விட்டுத் தப்பும் இடத்தையும் அவர்கள் 
காணமாட்டார்கள்.

அல்குர்ஆன் (18: 53)
சரி நம்முடைய தலைப்புக்கு வருவோம்.
"நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன்." என்று அல்லாஹ் அந்த வசனத்தில் குறிப்பிடுகிறான். நமக்கு கீழ்கண்ட சில ஐயங்கள் தோன்றலாம்.

ஏன் நட்சத்திரங்கள் விழ வேண்டும்? அப்படி விழுந்தால் நட்சத்திரங்கள் எங்குபோய் விழும்?
இந்த கேள்விகளுக்கான பதில்களை அறிந்து கொள்ள மேலே படியுங்கள்.

நட்சத்திரங்கள் தங்களுக்குள் ஒரு பெரு வெடிப்பை (ஹைட்ரஜன் குண்டுவெடிப்பு) நிகழ்த்திக் கொண்டு நிலைபெற்றிருக்கின்றன. இந்த வெடிப்புகளின் போது, ஒரு குறிப்பிட்ட அளவு பருப்பொருள் எனர்ஜியாக மாற்றப்பட்டு கணக்கிட முடியாத வெப்பம் உருவாகிறது. உதாரணமாக, ஒரு கிராம் பருப்பொருள் எனர்ஜியாக மாற இரண்டு மில்லியன் கிலோகிராம் நிலக்கரி தேவைப்படலாம். நம்முடைய சூரியனானது மத்தியமான நட்சத்திரத்துக்கு ஒப்பானது. அது வினாடிக்கு நான்கு பில்லியன் பருப்பொருளை எனர்ஜியாக மாற்றிக் கொண்டிருக்கிறது.


நட்சத்திரமானது, தன்னுடைய பருப்பொருளில் ஒரு சிறிய பகுதியை தன்னுடைய எரிபொருளாக உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறது. அதனுடைய அனைத்து பருமனும் எரிபொருளாக உபயோகப்படுத்தப்பட்ட பிறகு அந்த நட்சத்திரம் இறந்து விடுகிறது. இங்கு நட்சத்திரம் தன்னுடைய நிலையை முடித்துக்கொள்ளக் காரணம், அதிலிருந்த பருப்பொருளானது முடிந்து விடுவதே. எரிபொருள் இல்லாவிட்டால் அது தன்னுடைய நிலையை தக்கவைத்துக் கொள்ள முடியாது.

பிளாக் ஹோல்ஸ் ஏற்படுவதின் காரணம் என்னவென்றால், மிகப்பிரமாண்ட நட்சத்திரங்கள் தங்கள் வாழ்நாளை முடித்துக் கொள்வதால் தான்.

ஒரு பிளாக் ஹோலின் பருமன் என்னவென்றால், நம்முடைய சூரியனைவிட பல மடங்கு மேலானது என்பதே உண்மை. இந்த மாபெரும் உயிரிழந்த நட்சத்திரமானது கணக்கிலடங்காத ஈர்ப்பு விசையினை தன்னுள்ளே கொண்டிருக்கும். இதன் அழுத்தமானது ஒளியின் வேகத்தைவிட அதிகமானது. தோரயமாக அதன் வேகம் வினாடிக்கு 300,000 கி.மீ. இதன் பிடியிலிலருந்து எதுவும் (ஒளியும் கூட) தப்ப முடியாது. பிறகு இது தனக்கு அருகிலுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் விழுங்க ஆரம்பிக்கும். அதன் வாயிலிருந்து எதுவும் தப்ப முடியாது.

ஒரு நட்சத்திரமானது ப்ளாக் ஹோலாக மாறுவது என்பது அபூர்வமான அல்லது ஆச்சரியமான நிகழ்வாகும். நட்சத்திரமானது, தன்னுடைய பருப்பொருளை இழந்தவுடன் உடனடியாக ப்ளாக் ஹோலாக மாறுவதில்லை. முதலில் அதன் உருவம் மிகப்பெரிதாக வளர்கிறது ஊதிப் பெருசாக்கப்பட்ட பலூனைப்போல.. மேலும் அதன் வெப்பமானது 15 மில்லியன் டிகிரியிலிருந்து 100 மில்லியன் டிகிரியாக அதிகரிக்கிறது. பிறகு அது மிகப்பெரும் கோளமாக (Super Giant) உருமாறுகிறது. ஒரு சூப்பர் ஜயண்ட்டின் (Super Giant) பரப்பளவானது மிகப்பெரியது. அதன் கொள்ளளவு சுமார் 60 மில்லியன் சூரியன்களை உள்ளடக்கப் போதுமானதாகும்.
இப்படி உருவான ப்ளாக் ஹோலில் தான் அதற்குப் பக்கத்திலுள்ள உயிருடனிருக்கும் நட்சத்திரங்களும், கோள்களும் போய் விழுகின்றன. இதைத்தான் நம்முடைய குர்ஆனும் மறைபொருளாக விளக்குகிறது.

So, I swear by the place where the stars fall.  And that is indeed a mighty oath, if you but knew.
அல்குர்ஆன் (56: 75-76)

இப்பொழுது புரிகிறதல்லவா நட்சத்திரங்கள் எங்கு சென்று விழும் என்று?  இதன் மூலம் நம் குர்ஆன் எவ்வளவு பெரிய அற்புதமென்று விளங்கிக் கொள்ள முடிகிறது அல்லவா?.
அனைத்தையும் அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.

குர்ஆனில் 'முதஷாபிஹாத்' வசனங்கள் - ஒரு விளக்கம்

 

அவன் தான் (இவ்)வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துக்கள்) ஆகும், எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹாத் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத்தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.  
அல்குர்ஆன் (3:7) 

சகோதரர் பி.ஜே அவர்கள் மேற்கண்ட வசனங்களைப்பற்றி தன்னுடைய இணையதளத்தில் கீழ்கண்டவாறு விமர்சனம் செய்துள்ளார்.

இந்த வசனத்தைப் பெரும்பாலான விரிவுரையாளர்களும், மொழி பெயர்ப்பாளர்களும் தவறாகவே கையாண்டுள்ளனர்.

'முதஷாபிஹாத்' என்ற இரு கருத்துடைய வசனங்களை, "அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது" என்று அவர்களில் பெரும்பாலோர் கூறுகின்றனர்.


 "அல்லாஹ்வையும் அறிவுடையோரையும் தவிர யாரும் அறிய மாட்டார்கள்" என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம்.
 

இலக்கண விதியின் படி இரு விதமாக பொருள் கொள்ள இடமிருந்தாலும் புறச்சான்றின் அடிப்படையில் நாம் செய்த தமிழாக்கம் தான் சரியானது. குர்ஆனில் அல்லாஹ்வுக்கு மட்டுமே  தெரிந்த, எந்த மனிதருக்கும் தெரியாத வசனங்களும் உள்ளன என்பது அவர்களின் வாதம்.
 

ஒரே ஒரு மனிதனுக்குக் கூட புரியாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே புரிந்த வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் ஏன் கூற வேண்டும்? அறவே பயனில்லாத வேண்டாத வேலையை இறைவன் செய்வானா? இது போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற முடியாது.

Source:
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/86-iru-porul-tharum-varthaikal/ 
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/193-athvaithathibn-ariyamai/

என்னுடைய பார்வையில், நான் விளங்கிக்கொண்டதை இங்கு விளக்க விழைகிறேன். தவறிருந்தால் சகோதரர்கள் சுட்டிக் காட்டவும்.

'முதஷாபிஹாத்' என்ற இரு கருத்துடைய வசனங்களை, "அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது" என்று அவர்களில் பெரும்பாலோர் கூறுகின்றனர்.
  
இதை விளக்குவதற்காக, உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனத்தை எடுத்துக் கொள்வோம்.
  
எனவே கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
அல்குர்ஆன் (70: 40)
  
இந்த வசனத்தில் கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். நமக்குத்தெரிந்து ஒரு கிழக்கு - ஒரு மேற்கு தானே இருக்கிறது. இப்பொழுது (பூமி உருண்டையானது என்று கண்டுபிடிக்கப்பட்டவுடன்) அதன் உள் அர்த்தம் நமக்குத்தெரியும். இதே வசனத்தை ஒருவர் (பூமி உருண்டை என்று கண்டுபிடிப்பதற்கு முன்னால்) படித்திருந்தால் முழுவதுமாக விளங்கிக் கொள்ள முடியாது.

அதுபோல் குர்ஆனில் இன்னும் பல ஆச்சரியங்கள் இருக்கலாம். நம் காலத்தில் அதை விளங்கிக்கொள்ள முடியாதிருக்கலாம். பின்னால் வருபவர்கள் அப்படிப்பட்ட வசனங்களை எளிமையாக அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் அமையலாம் (அல்லது) விளங்கிக் கொள்ளும் காலத்தில் இருக்கலாம்.

என்னுடைய கருத்து என்னவென்றால், திருக்குர்ஆனை அல்லாஹ் அனைத்து காலங்களுக்கும் (உலக முடிவு நாள் வரை) ஏற்றதாக வடிவமைத்துள்ளான். அதனால்தான் எவராலும் அவனுடைய சவாலை கடந்த 1400 வருடங்களுக்கும் மேலாக முறியடிக்க முடியவில்லை. நம்முடைய காலகட்டத்தில் அறிவியல் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளதோ அந்தளவிற்கு நம்மால் சில 'முதஷாபிஹாத்' வசனங்களை விளங்கிக்கொள்ள முடிகிறது. மேலும், குர்ஆனுடைய பல வசனங்களின் உள் அர்த்தங்களை நமக்குப் பின்னால் வருபவர்கள் முழுமையாக விளங்கிக் கொள்ளலாம். இன்னும் உலக முடிவுநாள் வரை அனைத்து மக்களுக்கும் நம் குர்ஆன் நிச்சயமாக ஒரு ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
  
"அல்லாஹ்வையும் அறிவுடையோரையும் தவிர யாரும் அறிய மாட்டார்கள்" என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம். என்று சகோதரர் பி.ஜே கூறுகிறார்.

நம்முடைய காலம் வரை கண்டுபிடிக்கப்பட்டவைகளுக்கு (அல்லது) புரிந்துகொள்ளப்பட்டவைகளுக்கு, அவற்றை பற்றிய அறிவு நம்மில் பலருக்கு நிச்சயமாக இருக்கும். "அறிவுடையோர்கள் அவ்வசனங்களின் விளக்கத்தை அறிந்திருப்பார்கள்" என்பதற்கான விளக்கம் என்னவென்பதை கீழ்கண்ட ஒரு சிறு உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.

"தாமஸ் ஆல்வா எடிசன்" காலத்தில் தொலைபேசியோ அல்லது கம்ப்யூட்டரோ இல்லை. அதைப்பற்றி அவர் அறிந்திருக்க முடியாது. அதற்காக அவரை அறிவற்ற காலத்தில் வாழ்ந்ததாக கருதுவோமா? மேலும், நம்மிடையே இன்று அதிகபட்ச புழக்கத்திலுள்ள கம்ப்யூட்டரை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் அதன் தாக்கம் இந்தளவு இருக்கும் என்று நம்மால் உணர முடிந்ததா? இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அறிவு என்பது காலத்திற்கேற்றவாறு வேறுபடும். அறிவியல் வளர்ச்சியைப் பொறுத்து மாறுபடும் என்பதே சரியானது.

ஒரே ஒரு மனிதனுக்குக் கூட புரியாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே புரிந்த வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் ஏன் கூற வேண்டும்? அறவே பயனில்லாத வேண்டாத வேலையை இறைவன் செய்வானா?  இது போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற முடியாது. என்று சகோதரர் பி.ஜே கூறுகிறார்.

என்னுடைய கருத்து என்னவென்றால், மனிதர்களுக்குப் புரியாத எந்த ஒரு வசனத்தையும் அல்லாஹ் தன்னுடைய திருக்குர்ஆனில் நிச்சயமாக கூறியிருக்க மாட்டான். ஆனால், இரட்டை அர்த்தங்களை (அதுதான் 'முதஷாபிஹாத்') உள்ளடக்கிய வசனங்களை கூறியிருக்க முடியும்.
உதாரணமாக கீழ்கண்ட வசனத்தைப் பார்ப்போம்.
  
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல்  இறுகிச் சுருங்கும்படிச்செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
அல்குர்ஆன் (6: 125)
  
இந்த வசனத்தில், இறைவன் நமக்கு தெரிவிக்கும் நேரடியான பொருள்: அவன் நாடியவர்களுக்கு
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக அவர்களுடைய நெஞ்சை விசாலமாக்குவதாகவும், வழிகெடுக்க நாடியவர்களுக்கு அவர்களுடைய நெஞ்சை இறுக்கி சுறுக்குவதாகவும் கூறுகிறான். ஆனால், இந்த வசனத்தில் தான் விண்ணுக்குச் செல்பவர்களின் இதயம் இறுகிச் சுருங்குகிறது என்ற விஞ்ஞான உண்மையும் பொதிந்து கிடக்கிறது மறை பொருளாக....
இவைகள்தான் 'முதஷாபிஹாத்'   என்பது என் கருத்து.

 'முதஷாபிஹாத்' என்ற இரு கருத்துடைய வசனங்களை, "அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது"  என்ற மொழிபெயர்ப்புதான் சாலச் சிறந்தது என்பது என் கருத்து.  ஏனென்றால், அறிவுடையோர்களின் அறிவானது அந்தந்த காலத்திற்குத்தான் பொருந்துவதாக இருக்கும். எக்காலத்தையும் இறைவனைத்தவிர யாரும் உணரவோ அல்லது அறிந்துகொள்ளவோ முடியாது.