Sunday, September 15, 2013

இஸ்லாமிய ஒளியில் விஞ்ஞானம் - கிழக்குத் திசைகள் மற்றும் மேற்குத் திசைகள்

 
அன்பு சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
 
எல்லாம் வல்ல இறைவன் தனது திருமறையிலே கீழ்கண்டவாறு கூறுகிறான்.
 
எனவே, கிழக்குத் திசைகள் மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
 
அல்குர்ஆன் (70: 40)
 
நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். மேற்கண்ட வசனங்களில் கிழக்குத் திசைகள் என்றும், மேற்குத் திசைகள் என்றும் வருகிறதே என்று!! நமக்குத்தெரிந்து ஒரு கிழக்கு - ஒரு மேற்கு தானே இருக்கிறது என்றும் சகோதரர்கள் நினைக்கலாம்?!
 
சகோதரர்களே!!! இறைவன் ஏன் இவ்வாறு கூறுகிறான். அதற்குரிய அர்த்தம் என்ன? சற்று விரிவாகப் பார்ப்போம்.
 
சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது என்று நம்முடைய ஆரம்ப வகுப்பிலிருந்து நமக்கு சொல்லிக் கொடுத்ததை நாம் அறிவோம்.
 
இப்பொழுது ஒரு கேள்வி: உண்மையிலேயே சூரியன் கிழக்கில் உதிக்கிறதா? மேற்கில் மறைகிறதா? அது உண்மையென்றால், சூரியனானது காலையில் உதித்துவிட்டு மாலையில் அஸ்தமனமாகி விடுகிறதா? எளிதாக கேட்க வேண்டுமென்றால், நாம் விளக்கை ON செய்துவிட்டு பிறகு OFF செய்வதைப்போல் இறைவன் சூரியனை ON/OFF செய்கின்றானா?
 
சகோதரர்களே!!! சற்று சிந்தியுங்கள். சூரியன் தன்னுடைய நிலையிலிருந்து ஓய்வெடுத்துக்கொள்வதே இல்லை. அது வெப்பத்தை தன்னுள் உருவாக்கிக்கொண்டே இருக்கும் (இறைவன் அதற்கு "நிறுத்து" என்று கட்டளையிடும் வரை).
சூரியன் உதிப்பதும் இல்லை. அஸ்தமனம் ஆவதும் இல்லை.
 
பிறகு ஏன் நாம் "சூரிய உதயம்" என்றும் "சூரிய அஸ்தமனம்" என்றும் சொல்கிறோம்?
ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஏன் அப்படி சொல்லப்படுகிறது? இரவு - பகல் ஏன் ஏற்படுகிறது?
 
கீழ்கண்ட வசனத்தை பார்ப்போம் சற்று விரிவாக அறிந்து கொள்ள.
 
அவன் வானங்களையும் பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான். அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான். இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான். சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது. (நபியே!) அறிந்து கொள்வீராக!
அவன் (யாவரையும்) மிகைத்தவன். மிக மன்னிப்பவன்.
 
அல்குர்ஆன் (39: 5)
 
இறைவனின் மேற்கண்ட வசனத்தின் மூலம் பூமி சுற்றுகிறது என்றும் அதுவும் ஒரு தவணைப் பிரகாரம் (24 மணி நேரம்) நடக்கிறது என்றும் அறிந்து கொள்கிறோம்.
 
சகோதரர்களே!!! நாம் நன்றாக விளங்கிக் கொள்வதற்காக, இந்தியாவையும் அமெரிக்காவையும் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். பூமி சுழற்சியின் காரணமாக, இந்தியாவிற்கு சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக தன் முகத்தை (வெளிச்சத்தை) காட்டும் போது, அதே நேரத்தில் அமெரிக்காவில் கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழத் தொடங்கியிருக்கும்.
 
இந்தியாவிற்கு எது கிழக்கு திசையோ அது அமெரிக்காவிற்கு இப்பொழுது மேற்கு திசை.
அமெரிக்காவிற்கு எது கிழக்கு திசையோ அது இந்தியாவிற்கு இப்பொழுது மேற்கு திசை.
 
இப்பொழுது விளங்குகிறதல்லவா? இறைவன் ஏன் கிழக்குத் திசைகள் என்றும் மேற்குத் திசைகள் என்றும் சொன்னான் என்று?
 
இந்த விஞ்ஞான உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன் இறைவனைத் தவிர வேறு யாரால் சொல்லியிருக்க முடியும் சகோதரர்களே?
 
சிந்தித்துணரும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் திருக்குர்ஆனில் இருப்பதாக பின்வரும் வசனத்தின் மூலம் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு சுட்டிக்காட்டுகின்றான்.
 
நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக்காட்டும்) சான்றுகள் உள்ளன.
 
அல்குர்ஆன் (2: 164)
 
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். அவன் (யாவரையும்) மிகைத்தவன்.
 

No comments:

Post a Comment