அன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நம்மிடையே ஒரு கருத்து உண்டு. இஸ்ராயீல் அவர்கள்தான் நம் உயிரை கைப்பற்றும் (நமக்கு இறப்பு ஏற்படுத்தும்) மலக்காவார்கள் என்று. அதற்கு சில கட்டுக்கதைகளையும் கூறுவார்கள் நம் ஊர்களில்.
என்ன கதை என்று கேட்கும் சகோதரர்களுக்கு மட்டும் சிறிது ஞாபகப்படுத்தினால் அவர்கள் விளங்கிக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். சில மலக்குகளை இறைவன் பூமிக்கு அனுப்பி மண் அள்ளி வரச்சொன்னான். அனைவரும் பூமிக்கு வந்து மண் அள்ளும்போது பூமியின் வேண்டுகோளுக்கிணங்க சிலர் மண் அள்ளாமல் போய் விட்டார்கள். ஆனால் இஸ்ராயீல் மட்டும் பூமியின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமல் மண்ணை அள்ளிக்கொண்டு இறைவனிடம் சென்றார். அதனால்தான் இஸ்ராயீல் (அலை) அவர்களை இறைவன் மனிதர்களின் உயிர்களை எடுக்கும் மலக்காக தேர்ந்தெடுத்தான் என்று கூறுவார்கள்.
இந்த கட்டுக்கதை எப்படி நம் சமுதாயத்தில் பரவியது என்பது தெரியவில்லை. இந்த கதையை சிலர் ஏற்றுக்கொண்டாலும், அனைத்து சகோதரர்களும் கீழ்கண்டவற்றை சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
மலக்குகள் என்பவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மனிதனைப்போல் சிந்திக்கும் திறனை எல்லாம் வல்ல இறைவன் வழங்கவில்லை. இறைவன் என்ன சொல்கிறானோ அதை கண்டிப்பாக மலக்குகள் நிறைவேற்றியே தீருவார்கள்.
அப்படியிருக்க, சில மலக்குகள் மட்டும் எப்படி மண் அள்ளாமல் திரும்பச்சென்றார்கள்?
அப்படி மண் அள்ளாமல் சென்றால் இறைவனின் கட்டளையை மீறியவர்களாக அவர்கள் ஆக மாட்டார்களா?
என்ற கேள்விகள் அனைவருக்கும் எழலாம்.
இறைவனே தனது திருமறையில் இப்படி கூறுகிறான்.
1. (பாவிகளின் உயிர்களைக்) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக
2. (நல்லோர் உயிர்களை) இலேசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக
அல்குர்ஆன் (அத்தியாயம் 79 – வசனம் 1, 2)
இறைவன் இப்படி கூறுவதன் மூலம் உயிரை கைப்பற்றும் மலக்கு ஒருவரல்ல என்பதும் அவர்கள் பலர் என்பதும் நமக்கு விளங்குகிறது. மேலும், பாவிகளின் உயிர்களை கடினமாக கைப்பற்றும் மலக்குகள் தனியாகவும், நல்லோர் உயிர்களை இலகுவாக கைப்பற்றும் மலக்குகள் தனியாக இருப்பதாலும் தான் இறைவன் தனித்தனியாக அவர்களின் மீது சத்தியமிடுகிறான்;.
சகோதரர்களே!!! இதற்கு மாற்றுக்கருத்து இருந்தால் அல்லது இஸ்ராயீல்?அவர்கள்தான் நம் உயிரை கைப்பற்றும் மலக்கு என்று நம்புபவர்கள் இருந்தால் தயவுசெய்து தங்களுக்குத் தெரிந்த ஆதாரங்களை முன் வைக்கலாம்.
அல்லாஹ் மிகப்பெரியவன். மேலும் அவனே அனைத்தையும் அறிந்தவன்.
No comments:
Post a Comment