Sunday, September 15, 2013

குர்ஆனில் 'முதஷாபிஹாத்' வசனங்கள் - ஒரு விளக்கம்

 

அவன் தான் (இவ்)வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துக்கள்) ஆகும், எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹாத் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத்தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.  
அல்குர்ஆன் (3:7) 

சகோதரர் பி.ஜே அவர்கள் மேற்கண்ட வசனங்களைப்பற்றி தன்னுடைய இணையதளத்தில் கீழ்கண்டவாறு விமர்சனம் செய்துள்ளார்.

இந்த வசனத்தைப் பெரும்பாலான விரிவுரையாளர்களும், மொழி பெயர்ப்பாளர்களும் தவறாகவே கையாண்டுள்ளனர்.

'முதஷாபிஹாத்' என்ற இரு கருத்துடைய வசனங்களை, "அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது" என்று அவர்களில் பெரும்பாலோர் கூறுகின்றனர்.


 "அல்லாஹ்வையும் அறிவுடையோரையும் தவிர யாரும் அறிய மாட்டார்கள்" என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம்.
 

இலக்கண விதியின் படி இரு விதமாக பொருள் கொள்ள இடமிருந்தாலும் புறச்சான்றின் அடிப்படையில் நாம் செய்த தமிழாக்கம் தான் சரியானது. குர்ஆனில் அல்லாஹ்வுக்கு மட்டுமே  தெரிந்த, எந்த மனிதருக்கும் தெரியாத வசனங்களும் உள்ளன என்பது அவர்களின் வாதம்.
 

ஒரே ஒரு மனிதனுக்குக் கூட புரியாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே புரிந்த வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் ஏன் கூற வேண்டும்? அறவே பயனில்லாத வேண்டாத வேலையை இறைவன் செய்வானா? இது போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற முடியாது.

Source:
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/86-iru-porul-tharum-varthaikal/ 
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/193-athvaithathibn-ariyamai/

என்னுடைய பார்வையில், நான் விளங்கிக்கொண்டதை இங்கு விளக்க விழைகிறேன். தவறிருந்தால் சகோதரர்கள் சுட்டிக் காட்டவும்.

'முதஷாபிஹாத்' என்ற இரு கருத்துடைய வசனங்களை, "அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது" என்று அவர்களில் பெரும்பாலோர் கூறுகின்றனர்.
  
இதை விளக்குவதற்காக, உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனத்தை எடுத்துக் கொள்வோம்.
  
எனவே கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
அல்குர்ஆன் (70: 40)
  
இந்த வசனத்தில் கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். நமக்குத்தெரிந்து ஒரு கிழக்கு - ஒரு மேற்கு தானே இருக்கிறது. இப்பொழுது (பூமி உருண்டையானது என்று கண்டுபிடிக்கப்பட்டவுடன்) அதன் உள் அர்த்தம் நமக்குத்தெரியும். இதே வசனத்தை ஒருவர் (பூமி உருண்டை என்று கண்டுபிடிப்பதற்கு முன்னால்) படித்திருந்தால் முழுவதுமாக விளங்கிக் கொள்ள முடியாது.

அதுபோல் குர்ஆனில் இன்னும் பல ஆச்சரியங்கள் இருக்கலாம். நம் காலத்தில் அதை விளங்கிக்கொள்ள முடியாதிருக்கலாம். பின்னால் வருபவர்கள் அப்படிப்பட்ட வசனங்களை எளிமையாக அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் அமையலாம் (அல்லது) விளங்கிக் கொள்ளும் காலத்தில் இருக்கலாம்.

என்னுடைய கருத்து என்னவென்றால், திருக்குர்ஆனை அல்லாஹ் அனைத்து காலங்களுக்கும் (உலக முடிவு நாள் வரை) ஏற்றதாக வடிவமைத்துள்ளான். அதனால்தான் எவராலும் அவனுடைய சவாலை கடந்த 1400 வருடங்களுக்கும் மேலாக முறியடிக்க முடியவில்லை. நம்முடைய காலகட்டத்தில் அறிவியல் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளதோ அந்தளவிற்கு நம்மால் சில 'முதஷாபிஹாத்' வசனங்களை விளங்கிக்கொள்ள முடிகிறது. மேலும், குர்ஆனுடைய பல வசனங்களின் உள் அர்த்தங்களை நமக்குப் பின்னால் வருபவர்கள் முழுமையாக விளங்கிக் கொள்ளலாம். இன்னும் உலக முடிவுநாள் வரை அனைத்து மக்களுக்கும் நம் குர்ஆன் நிச்சயமாக ஒரு ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
  
"அல்லாஹ்வையும் அறிவுடையோரையும் தவிர யாரும் அறிய மாட்டார்கள்" என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம். என்று சகோதரர் பி.ஜே கூறுகிறார்.

நம்முடைய காலம் வரை கண்டுபிடிக்கப்பட்டவைகளுக்கு (அல்லது) புரிந்துகொள்ளப்பட்டவைகளுக்கு, அவற்றை பற்றிய அறிவு நம்மில் பலருக்கு நிச்சயமாக இருக்கும். "அறிவுடையோர்கள் அவ்வசனங்களின் விளக்கத்தை அறிந்திருப்பார்கள்" என்பதற்கான விளக்கம் என்னவென்பதை கீழ்கண்ட ஒரு சிறு உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.

"தாமஸ் ஆல்வா எடிசன்" காலத்தில் தொலைபேசியோ அல்லது கம்ப்யூட்டரோ இல்லை. அதைப்பற்றி அவர் அறிந்திருக்க முடியாது. அதற்காக அவரை அறிவற்ற காலத்தில் வாழ்ந்ததாக கருதுவோமா? மேலும், நம்மிடையே இன்று அதிகபட்ச புழக்கத்திலுள்ள கம்ப்யூட்டரை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் அதன் தாக்கம் இந்தளவு இருக்கும் என்று நம்மால் உணர முடிந்ததா? இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அறிவு என்பது காலத்திற்கேற்றவாறு வேறுபடும். அறிவியல் வளர்ச்சியைப் பொறுத்து மாறுபடும் என்பதே சரியானது.

ஒரே ஒரு மனிதனுக்குக் கூட புரியாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே புரிந்த வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் ஏன் கூற வேண்டும்? அறவே பயனில்லாத வேண்டாத வேலையை இறைவன் செய்வானா?  இது போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற முடியாது. என்று சகோதரர் பி.ஜே கூறுகிறார்.

என்னுடைய கருத்து என்னவென்றால், மனிதர்களுக்குப் புரியாத எந்த ஒரு வசனத்தையும் அல்லாஹ் தன்னுடைய திருக்குர்ஆனில் நிச்சயமாக கூறியிருக்க மாட்டான். ஆனால், இரட்டை அர்த்தங்களை (அதுதான் 'முதஷாபிஹாத்') உள்ளடக்கிய வசனங்களை கூறியிருக்க முடியும்.
உதாரணமாக கீழ்கண்ட வசனத்தைப் பார்ப்போம்.
  
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல்  இறுகிச் சுருங்கும்படிச்செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
அல்குர்ஆன் (6: 125)
  
இந்த வசனத்தில், இறைவன் நமக்கு தெரிவிக்கும் நேரடியான பொருள்: அவன் நாடியவர்களுக்கு
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக அவர்களுடைய நெஞ்சை விசாலமாக்குவதாகவும், வழிகெடுக்க நாடியவர்களுக்கு அவர்களுடைய நெஞ்சை இறுக்கி சுறுக்குவதாகவும் கூறுகிறான். ஆனால், இந்த வசனத்தில் தான் விண்ணுக்குச் செல்பவர்களின் இதயம் இறுகிச் சுருங்குகிறது என்ற விஞ்ஞான உண்மையும் பொதிந்து கிடக்கிறது மறை பொருளாக....
இவைகள்தான் 'முதஷாபிஹாத்'   என்பது என் கருத்து.

 'முதஷாபிஹாத்' என்ற இரு கருத்துடைய வசனங்களை, "அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது"  என்ற மொழிபெயர்ப்புதான் சாலச் சிறந்தது என்பது என் கருத்து.  ஏனென்றால், அறிவுடையோர்களின் அறிவானது அந்தந்த காலத்திற்குத்தான் பொருந்துவதாக இருக்கும். எக்காலத்தையும் இறைவனைத்தவிர யாரும் உணரவோ அல்லது அறிந்துகொள்ளவோ முடியாது.

No comments:

Post a Comment